இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா (Indika de Silva) தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் நேற்றய தினம் மோதல் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடற்படையினர் நேற்றிரவு விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் காரைநகர் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மயிலிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட பின் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்திக்க டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் 17ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.