நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார்.
அதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நான்காம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் சிரமதான பணிகள் நடைபெற்றுள்ளது.
இதன்போது பாடசாலையின் வகுப்பறை கட்டமைப்பு,குடிநீர் வசதி மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதற்கான இடவசதி மற்றும் தளபாட வசதிகள் போன்றவற்றை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இதன்போது ஆராய்ந்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளில் குடிநீர் வசதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை பேணுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைக்கு மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு சீருடை அவசியமில்லை எனவும்,சாதாரண உடையின் சமூகமளிக்க முடியும்.
இரண்டு வாரங்களுக்கு கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இணைப்பாடவிதான செயற்பாடுகள் முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் உடல் வெப்பநிலையினை அறிவதற்கு உடல் வெப்பமானியும் இதன்போது பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் ,ஆரம்பிக்கப்படும் பாடசாலை தொடர்ந்து மூடாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஒத்துழைப்புடன் பாடசாலையினை முற்று முழுதாக சிரமதானம் செய்து சிறந்த முறையில் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தரிசன பாண்டிகோரள மற்றும் உப்புவேளி பிரதேச சபை தலைவர் உட்பட அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிரமதானப் பணியை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.