கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா (Douglas Devananda) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மீனவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அதற்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று (26) மாலை வாழைச்சேனைக்கு வருகை தந்த அமைச்சர், பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீனவர்களுடனும் மீன்பிடித்தறைமுக அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், ஏனைய பிரச்சினைகளுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து தொழிலுக்காகக் கடந்த மாதம் 26ம் திகதி சென்ற படகு காணாமல் போன நிலையில், அந்தமான் தீவில் கடலோர காவலாளிகளால் பிடிக்கப்பட்டுப் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதில் உள்ள நான்கு மீனவர்களும் தேகாரோக்கியமாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களையும் படகையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை காணாமல் போன படகின் குடும்ப உறுப்பினர்களை வாழைச்சேனை அல் ஸபா மீனவர் சங்கத்தில் சந்தித்த அமைச்சர் அவர்களிடம் மிக விரைவில் உங்களது குடும்ப உறுப்பினர்கள் வந்து சேர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் தெரிவிக்கையில்,
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர்.
இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களைப் பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். விரைவில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன். சஜித் பிரேமதாச தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டம் என்ற ஒன்றைப் பயன்படுத்திக்கொண்டார்.
மக்களுக்கு கொஞ்ச கொஞ்சக் காசை வழங்கி வாக்கினை அபகரிக்க நினைத்தார் முடியவில்லை.எங்களது கஜனா காளியாகவுள்ளது.கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணத்தினை வழங்கக்கூடிய நிலையில்லை.இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழு நாட்டுக்குமான பிரச்சினை.
தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பானது தற்காலிகமானது.எவ்வாறு இந்த நாட்டிலிருந்த வன்முறைக்குத் தீர்வுகண்டாரோ, இந்த நாட்டில் ஏற்பட்ட கோவிட் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார,மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்துவைப்பார் என்று நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.