சுவிஸில் இருந்து உயிருடன் கம்பளி நண்டுகளை ஜேர்மனிக்கு கடத்திய நபருக்கு 50,000 யூரோ (இலங்கை மதிப்பில் 1கோடியே 17 இலட்சத்து 99 ஆயிரத்து 219 ரூபாய்) அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய (European Union) ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட குறித்த நண்டுகளை கைவசம் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 46 வயதான அந்த நபர் சுவிஸ் – ஜேர்மன் எல்லையில் 17 கம்பளி நண்டுகளுடன் சிக்கியுள்ளார்.
குறித்த நபர் எந்தப் பொருட்களையும் உடன் எடுத்துச் செல்லவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் அந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே, பத்திரப்படுத்தப்பட்ட 17 கம்பளி நண்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டில் சீனாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த இனங்கள் நாட்டு நண்டுகளை இடமாற்றம் செய்து சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைத்து வருவது கண்டறியப்பட்டதை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தடை விதித்துள்ளது.
குறித்த நபரிடமிருந்து உயிருடன் பறிமுதல் செய்யப்பட்ட கம்பளி நண்டுகள் தற்போது பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் இந்த நண்டுகளை என்ன செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
இதேவெளை, தடை செய்யப்பட்ட இனத்தை கடத்தியதாக கூறி, குறித்த நபருக்கு 50,000 யூரோ தொகை அளவுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.