லண்டன் – ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான குறித்த பொதி அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் ஒரு முனையத்தில் பாதுகாப்புப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பை ஒன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை உருவாகியது.
இதனையடுத்து விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், குறித்த பொதியை ஆய்வு செய்வதற்கு இராணுவத்தை சேர்ந்த வெடிமருந்து நிபுணர்கள் வரவழைக்கப்படதாகவும், விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் எசெக்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
எனினும், குறித்த பொதியில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், பயணிகளின் பொறுமை மற்றும் புரிதலுக்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விமான நிலையம் மீளவும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.