பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான செயலணியை ஜனாதிபதி உடனடியாக கலைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இல்லை. அப்படியென்றால், இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தமில்லையா? என்றும், தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லை என்று சொல்கின்றீர்களா? என்ற கேள்வியை ஜனாதிபதியிடம் கேட்க விரும்புவதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான செயலணி அனைத்து தரப்பினராலும் பகிஷ்கரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், மாகாண சபைகளை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும், மாகாண சபைகளுக்கான சட்டமாக்கும் உரிமையை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.