கனமழையின் தாக்கத்தினால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் என்பவற்றின் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது மக்கள் தற்போதுள்ள மழை நிலைமை குறைவடைந்த பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தோடு சாதாரண சிகிச்சை பெறுவோர் தற்போதைய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டாம்.
கிளினிக் பகுதி மற்றும் இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக தற்போது சிகிச்சைகள் இடம்பெறாத நிலை காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களில் சாதாரண சிகிச்சை பெற வருவோர் மழை முடிந்த பின்னர் வருகை தந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் சாதாரண சிகிச்சைகள் மாத்திரம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.