சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இருந்து ஸ்ரீலங்காவை பாதுகாக்கும் முனைப்புடனேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்காவிற்கு பயணமாக முற்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக அவர் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் வவுனியா மாவட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இன் 15 வது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் கடந்த 1,728 நாளாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலுள்ள ஸ்ரீலங்கா தொடர்பான வழக்கை குழப்ப சுமந்திரன் முற்படுவதாக ஆதங்கம் வெளியிட்டனர்.