இலங்கையில் காய்கறிகள், மசாலாப் பொருட்கள், கருவாடு, பழங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட அன்றாட உபயோகப் பொருட்களின் விலைகள் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ பாகற்காய் 400 ரூபாய்க்கும் லீக்ஸ், கரட், புடலங்காய் மற்றும் போஞ்சி ஒரு கிலோ 320 ரூபாய்க்கும், கோவா ஒரு கிலோ 240 ரூபாய்க்கும் பீட் ரூட் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
தேசிக்காய் ஒரு கிலோ 800 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 500 ரூபாய் வரையிலும், தக்காளி ஒரு கிலோ 700 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளதென கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ கிராம் தக்காளி 200 ரூபாயில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளதெனவும், தக்காளி கொள்வனவு செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
100 கிராம் மிளகாய் தூள் 102 ரூபாய் வரையிலும், 100 கிராம் மிளகு தூள் 220 ரூபாய் வரையிலும், 100 கிராம் மசாலா தூள் 105 ரூபாய் ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் அதிகமாக உணவிற்காக பெற்றுக் கொள்ளப்படும் நெத்தலி, கருவாடு விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நெத்தலி ஒரு கிலோ கிராமின் விலை 1500 – 600 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இரண்டாம் நிலையில் இலங்கை நெத்தலி ஒரு கிலோ கிராம் 1200 – 1300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கருவாடு ஒரு கிலோ கிராமின் விலை 1000 -1500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
வாழைப்பழம், அப்பிள், திராட்சைபழம், பப்பாசிப்பழமை போன்ற பழங்களின் விலைகளும் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.