கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோய்யியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம் (12.11.2021) மாத்திரம் மொத்தமாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனா தொற்று இல்லை என்ற மன நிலையில் பொது மக்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளது. பேரூந்துகளில் பயணம் செய்வோர், சந்தைகள் மற்றும் பொது இடங்களில் என மக்கள் முக கவசம் இல்லாமலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதும் செயற்பட்டு வருகின்றனர்.
இதன் விளைவாகவே குறைந்திருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோய்யியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பொது இடங்களுக்கு மக்கள் பயணிக்கின்ற போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோய்யியல் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.