சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்கியோ, மரங்கள் விழுந்தோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தி.நகர் பசுல்லா சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக ஜி.என்.செட்டி சாலை- வாணி மகால் சந்திப்பில் இருந்து பசுல்லா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், ஜி.என்.செட்டி சாலை, அபிபுல்லா சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது.
அண்ணா பிரதான சாலையில் மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள் எதிர்திசையில் அனுமதிக்கப்படுகிறது.
இதேபோல உதயம் சந்திப்பில் காசி முனையத்தில் இருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா. சாலையில் பி.எல்.சி. சந்திப்பில் மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பி.எல்.சி. சந்திப்பில் உள்ள ஈ.வெ.ரா. சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ஈ.வி.கே.சம்பத் சாலையை நோக்கி திருப்பி அனுப்பப்படுகிறது.
சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்கியோ, மரங்கள் விழுந்தோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. போக்குவரத்து இடையூறும் இல்லை என்று மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.