தமிழ் மக்களால் அனுஷ்ட்டிக்கபடும் கார்த்திகை தீபத் திருநாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த திருநாளை தீபம் ஏற்றி கொண்டாடிய வேளை, மாவட்டத்தின் சில இடங்களில் இராணுவத்தினர் கார்த்திகை தீபத்திருநாளை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி நினைவேந்தப்படும் நிலையில் நேற்றைய நாளிலிருந்தே முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நினைவேந்தலுக்கு எதிராக தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் வீடுகளின் முன்பாகவும் , தமது தொழில் நிலையங்கள், தோட்ட நிலங்கள் போன்றவற்றில் தீபம் ஏற்றி கார்த்திகை நாளை அனுஷ்டிப்பது போன்றே இன்று இரவு 06 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வாழைக்குற்றிகளை வீட்டின் முன்பாக நாட்டி அதில் சுடர் வைத்து ஏற்றி கார்த்திகை திருநாளை கொண்டாடிய நிலையில் குழப்பமடைந்த இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் தீபம் ஏற்றிய சில வீடுகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை மாதத்தில் தங்களது பண்டிகைகளைக்கூட சுதந்திரமாக செய்ய முடியாத நிலையில் அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.