இந்தியாவில் முதன் முறையாக ஆண்களை காட்டிலும் பெண்களின் சனத்தொகை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒட்டுமொத்த பாலின விகிதத்தின் துல்லியமான கணக்கை வழங்குவதாக இந்திய மக்கள் தொகை நிதியத்தின் பணிப்பாளர் பூனம் முத்ரேஜா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்தியாவில் ஆண்களை விட பெண் மக்கள் தொகை அதிகரிப்பது இதுவே முதல் முறை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் சில தரப்புக்கள் இந்த தரவு ஏற்றுக்கொள்ள முடியாத தரவு என்று கூறுகின்றன.
சுமாா் “100 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, இந்தியாவில் பெண்களை விட ஆண்களே அதிகம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது” என்று ஆராய்ச்சியாளர் மற்றும் ஆர்வலர் சாபு ஜார்ஜ் கூறியுள்ளார்.
“கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 940 பெண்கள் இருந்தனர். எனில் 10 வருடத்தில் எவ்வாறு இந்தளவு மாற்றம் ஏற்பட்டிருக்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் பெண் குழந்தைகளை பெற்றெடுக்க சமூகத்தின் மத்தியில் காட்டப்படும் விருப்பமின்மையின் மத்தியிலேயே பெண்களின் சனத்தொகை அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.