இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்தும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டத்தின் போதே இவ்வாறு தமது கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்
உண்மையான சர்வதேசம் எனின் இவ்வாறான அச்சறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறுகின்ற போது அதற்கான பிரதிபலிப்பினைக் காட்டி நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P.Ariyanethiran) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக இருந்து வருகின்ற விடயம்.
தற்போதைய ஜனாதிபதியின் அண்ணன் ஜனாதிபதியா இருந்த காலத்திலும் நாங்கள் பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றோம்.சுமார் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் 36 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள்.
தற்போதைய அரசாங்கம் பாராம் எடுக்கும் போது ஊடக சுதந்திரம் மதிக்கப்படும், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என்ற செய்தியையே சொல்லியிருந்தார்கள்.
ஆனால் அதன் செயற்பாடுகளைப் பார்த்தால் தொடச்சியாக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதுமாகவுமே இருக்கின்றது.
நேற்யை தினம் நடைபெற்ற சம்பவம் பாராதூரமான மனித உரிமை மீறல் என்பதைச் சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்.
2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட காலத்தில் இருந்து சர்வதேசத்திடம் நாம் பலவற்றைத் தெரிவித்திருக்கின்றோம். தற்போது யுத்தமற்ற சூழலொன்று நடைபெறுகின்றது.
இதன் போதும் பலவிதமான அச்சுறுத்தல்கள் இருக்கின்றதென்பதை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.அத்தோடு ஊடகவியலாளர்களும் இது தொடர்பில் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள்.
ஆனால் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றதா? மௌனம் காக்கின்றதா? என்பது தெரியவில்லை.
உண்மையான சர்வதேசம் எனின் இவ்வாறான அச்சறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறுகின்ற போது அதற்கான பிரதிபலிப்பினைக் காட்டி நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறே மனித உரிமைச் செயற்பாடுகள் மாத்திரமல்லாமல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதியையும் கேட்டு நிற்கின்றோம்.
இதுவரைக்கும் அதற்கான நீதி சர்வதேசத்தினூடாக எங்களுக்குக் கிடைக்கவில்லை.ஆனால் ஏமாற்றமும், அலைச்சலும் தான் எங்களுக்குத் தொடருகின்றது.
எனவே இந்தப் போராட்டத்தின் மூலம் சர்வதேசத்திற்கு ஒரு பார்வையைக் கொடுக்க வேண்டும்.
சர்வதேசம் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.அதனூடாக இனியாவது ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது.
இறந்த பொதுமக்களை நினைவு கூருவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்ற செய்தியை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் இனியும் தொடருமாக இருந்தால் இந்தப் போராட்டத்தைத் தொடர்சியாக முன்கொண்டு செல்வதைத் தவிர எங்களுக்கு மாற்றுவழி இல்லை என தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி இந்த நாட்டிலே ஒரு இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (Govindan Karunakaram) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியில் கொண்டு வருபவர்கள். உண்மையை விரும்பாத இந்த அரசினால் கடந்த காலங்களிலே ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி இந்த நாட்டிலே ஒரு இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகின்றது.
இதன் காரணமாக இறந்தவர்களைக் கூட நினைவு கூர முடியாமல் நாங்கள் நிற்கின்றோம்.
தெற்கிலே இறந்தவர்களைத் தாராளமாக நினைவுகூரக்கூடிய நிலை இருக்கும் போது வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களாகிய நாம் எமக்காக இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலையில் இருக்கின்றோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றது.
இந்த அரசிற்குச் சர்வதேசத்தினால் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிக் கொண்டிருக்கின்றது.அதன் நிமித்தம் அச்சட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக அரசு தெரிவித்திருக்கின்றது.
தமிழர்களாகிய நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கி அரசியற் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றோம்.
இந்த நாட்டிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
பல குற்றச் செயல்களைச் தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்படுத்தி வந்த அந்தத் தேரரை ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நியமித்திருக்கின்றார்கள்.புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அந்தப் புதிய அரசியலமைப்பிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையிலே சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்றே அது உருவாகும் என அறிய முடிகின்றது.
13வது திருத்தச் சட்டம் வடகிழக்கிற்கு மாத்திரம் தேவையானது அல்ல. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி அதனூடாக மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் தான் வடகிழக்கு மாத்திரம் அல்ல தெற்கில் கூட பொலிஸ் அதகாரங்களை அந்தந்த மாகாணங்கள் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
எனவே சர்வதேசம் இந்த நாட்டில் நடப்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.நேற்றைய நிகழ்விற்கான தடைவிதிப்பினைக் கூட சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
எனவே சர்வதேசம் இந்த நாட்டின் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
இந்த அடக்குமுறை தொடருமாக இருந்தால் எமது போராட்டம் தொடர்ச்சியாக இருக்கும். நாங்கள் எப்போதும் ஊடகவியலாளார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.