புகையிரதம் மற்றும் விமானம் மூலமாக கனடாவிற்குள் வரும் 12 வயதிற்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கோவிட் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வருகின்ற போதும் பேருந்துகளுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கனடா இந்த கட்டுப்பாட்டை கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அறிவித்திருந்தது.
இதேவேளை தடுப்பூசி பெறாத வெளிநாட்டவர்களை கனடாவிலிருந்து விமானம் வாயிலாக வெளியேற அனுமதிக்கும் வகையில், பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை தற்காலிகமாக ஒரு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை பயன்படுத்த விரும்பும் பயணிகள், விமானம் ஏறும் முன் கோவிட்டிற்கான மூலக்கூறு (molecular test for COVID – 19) பரிசோதனை செய்து தமக்கு கோவிட் தொற்று இல்லை என நிரூபிக்க வேண்டும் எனவும், எதிர்வரும் அக்டோபர் 30ஆம் திகதிக்கு முன் கனடாவுக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழுமையாக கோவிட் தடுப்பூசி பெற்ற, கனடாவுக்குள் நுழைய அங்கீகாரம் பெற்ற பயணிகள் வெளிநாடு சென்றுவிட்டு 72 மணிநேரத்திற்குள் கனடாவுக்கு திரும்பும் பட்சத்தில், அவர்கள் கனடாவுக்குள் நுழையும் முன், இந்த மூலக்கூறு பரிசோதனை செய்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்கானது விமானம் அல்லது நிலத்தொடர்பில் பயணிக்கும் கனேடிய குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் அல்லது இந்திய சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே என கூறப்பட்டுள்ளது.
கனடாவுக்கு வருபவர்கள், முழுமையான தடுப்பூசி பெற்ற பயணிகள் என அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அவர்கள் கனடாவுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான டோஸ் தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.