இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் மீட்க முடியாத நிலையில் உள்ள இந்திய மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை இறுதி செய்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சிறி கோபால் பாக்லே, தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடற்றொழில் தொடர்பான இந்தியா -இலங்கை கூட்டுப் பணிக்குழுவை முன்கூட்டியே கூட்டுவதற்கும் இரு நாட்டு மீனவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, மேலும் இரண்டு உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் விஜயம் செய்தார்.
கடந்த 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது தமிழ் நாட்டின் ஆளுநர் என்.ரவியை உயர் ஸ்தானிகர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இந்தியா – இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து அவருக்கும், தமிழ் நாட்டின் உயர் அதிகாரிகளுக்கும் உயர்ஸ்தானிகர் விளக்கமளித்தார்.
தமிழ் நாட்டின் மீன்பிடி – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நிதி மற்றும் மனிதவள முகாமைத்துவ அமைச்சர் கலாநிதி பழனிவேல் தியாகராஜன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் ஆகியோரை சென்னையில் வைத்து சந்தித்து உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியுள்ளார்.
தனது விஜயத்தின் முதல் நாளில் ராமேஸ்வரம் கடற்கரை நகரத்திற்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உள்ளூர் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக உருவாக்கியுள்ள உட்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகள் வருகை தந்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளனர். திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை புனர்வாழ்வு முகாமுக்கும் சென்று அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளுடன் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.