முல்லைத்தீவு கடலில் மூழ்கிய மாயமான இளைஞர்களை தேடும் நடவடிக்கையில் நள்ளிரவு தாண்டியும் முல்லைத்தீவு கரையோர கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் சங்கங்கள் குறிப்பாக கள்ளப்பாட்டுப்பகுதி மீனவர் சங்கம் மின் பிறப்பாக்கி கொண்டுவந்து போக்கஸ் லையிட்டுக்களை கடற்கரையில் கட்டி சடலம் கரை ஒதுங்கும் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து ஒரு யுவதியும், நண்பர்கள் மூவரும் என நால்வர் வாகனத்தில் வந்து கடலில் குளித்த போது யுவதியின் கண்முன்னே அவருடன் வந்த மூன்று நண்பர்களும் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, மதகுவைத்தகுளம் பகுதியினை சேர்ந்த 27 அகவையுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல்லை சேர்ந்த 26 அகவையுடைய விஜயகுமாரன் தர்சன், மதவுவைச்சகுளத்தினை சேர்ந்த 26 அகவையுடைய சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் காணாமல்போயுள்ள நிலையில் 27 அகவையுடைய மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரின் உடலங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள்,கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் இறங்கி தேடமுடியாத நிலையில் சடலம் கடலலையில் அடித்து கரை ஒதுங்கும் அல்லது கரைபகுதியில் சடலத்தின் அசைவு ஏதும் தெரியும் என்ற நம்பிக்கையில் கடற்கரையில் காத்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் இரண்டு இளைஞர்களின் உடலங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடற்கரையில் காத்திருக்கின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.