அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் மட்டுமின்றி, அரச உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
வருட இறுதியில் நீண்ட விடுமுறையை கழிப்பதற்காக இவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளை தெரிவு செய்துள்ளனர்.
இவர்களில் பலரது பிள்ளைகள் இந்நாடுகளில் கல்வி கற்று வருவதுடன் சிலரது குடும்பங்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றன.
இந்த நாடுகளில் நத்தார் மற்றும் வருட இறுதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. இதனால், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன் அது தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதியே நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.