பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைத் தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமையானது ஏதாவது அழுத்தங்களுக்கு அடி பணிந்தா என்பது தொடர்பில் சந்தேகம் எழுகின்றது என பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் உள்ளிட்ட வைரஸ் பிறழ்வுகளின் பரவல் அதிகரித்துள்ளதால், நாடு எதிர்காலத்தில் ஆபத்தை – அழிவைச் சந்திக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளைக் கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய அவதான நிலையை நோக்கி செல்லக்கூடும்.
இந்தப் பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மேலும் தளர்த்துவது எவ்வளவு நியாயமானது மற்றும் நடைமுறையானது என்ற கடுமையான கேள்வி எழுகின்றது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் கோவிட் தொற்றுநோய் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்தத் தளர்வைச் செய்துள்ளனரா? அல்லது யாருடையதாவது அழுத்தங்கள் காரணமாக இவற்றைச் செய்கின்றனரா? என்ற பாரிய பிரச்சினை எங்களுக்கு உள்ளது.
எவ்வாறாயினும், கோவிட் தொற்றுநோய் எதிர்காலத்தில் நாட்டில் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலத்தைப் பொதுமக்கள் கொண்டாடிய பின்னர் அதிகளவில் நோயாளிகள் பதிவாக வாய்ப்புண்டு.
இப்போதும் கூட, ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களை விட அடிமட்ட அளவில் அதிக நோயாளிகள் பதிவாகி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.