அமெரிக்காவில் பனிக்காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகவும் உயிரிழக்கவும் நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்நாட்டில் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்து வருவதுடன் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. மேலும் தினசரி பலி எண்ணிக்கையும் 1300-ஐ கடந்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன், பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி மூலம் ஒமிக்ரோன் பரவல் மோசமடையாமல் நாடு நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அமெரிக்கர்கள் நோய் தொற்று மற்றும் உயிரிழப்பு குறித்து கவலையடைய தேவையில்லை எனவும் பைடன் கூறியுள்ளார்.
அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் தான் நாம் நமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் . நாம் நமது தொழில் , மற்றும் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.