கடந்த கிழமை 300 மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகிச்சைக்கு) உட்படுவர் என பேரிடர் தடுப்பு அறிஞர்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது. தற்போதைய சுவிற்சர்லாந்தின் நலவாழ்வு (சுகாதார) சூழல் இடர் நேரக்கூடிய வாய்ப்புடன் உள்ளது.
பெரும் அறுவை மருத்துவம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத நேர்ச்சி (விபத்து) ஏற்பட்டாலும் விரைந்து வைத்தியம் செய்வதற்கு மருத்துவமனைகளில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது இடர் நேர் சூழலாக நோக்கப்பட்டிருந்தது.
சுவிற்சர்லாந்து நடுவனரசு இதன் காரணங்களால் பெரும் கட்டுப்பாடுகளை அல்லது இறுக்கங்களை அறிவாக்கலாம் அல்லது சிறு முடக்கம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற நடுவனரசின் ஊடக சந்திப்பில் திங்கள்(20.12) முதல் நடைமுறைக்கு வரும் புதிய இறுக்கங்கள் அறிவிக்கப்பட்டது.
2ஜி நடைமுறையுடன் முகவுறை- அத்துடன் கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும்
தற்போது 3ஜி, அதாவது தடுப்பூசி இட்டோர், நோயில் குணம் அடைந்தோர் மற்றும் கோவிட் தொற்று சோதனை செய்தோர் உள்நுழையலாம் எனும் விதிகள் கடைப்பிடிக்கப்படும் உள்ளரங்குகளில் 20.12.21 முதல் மகுடநுண்ணித் (கோவிட்-19) தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் மற்றும் நோய்த் தொற்றிற்கு ஆட்பட்டு குணம் அடைந்தோர்கள் முகவுறையுடன் உள்ளரங்குகளில் நுழையலாம் என அறிவிக்கப்படுகின்றது.
இது உணவகங்கள், பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிலையங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் பொருந்தும். மேலும் எங்காயினும் எப்போதும் முகவுறை அணிந்திருக்க வேண்டும். உணவு உட்கொள்வதானால் கட்டாயம் இருக்கையிலிருந்தபடி மட்டுமே உண்ணலாம். எழுந்தவுடன் முகவுறை அணியவேண்டும்.
கட்டணமற்ற நோய்த்தொற்று சோதனை
முன்னர் கட்டணமற்று இருந்த கோவிட் நோய்த்தொற்றுச் சோதனைச் சான்றுகள் பின்னர் சுவிஸ் அரசால் கட்டணம் அறவிடப்படுவதாக மாற்றப்பட்டது. கடந்த மக்கள் வாக்கெடுப்பில் பெறுபேற்றிற்கு அமைய நோய்த்தொற்று இருக்கலாம் எனும் ஐயத்துடன் தொடர்வினை (பி.சி.ஆர் அல்லது விரைந்த நோய் எதிர்ப்புத் திறனூட்டி (அன்ரிக்கேன்) மருத்துவர் முன்மொழிவில் செய்யப்பட்டால் அதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
அதுபோல் பொதுச்சேர்மமாக பாடசாலையில் அல்லது பணியகத்தில் கோவிட் தொற்றுச் சோதனையில் உறுதி செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் நோய்த்தொற்றுச் சோதனைக்கும் தனி ஆட்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பணய நோக்கத்திற்கு அல்லது நோய்த்தொற்று அறிகுறி இல்லாது தன்விருப்பில் எடுக்கும் சோதனைகளுக்குப் பயனாளர்கள் தாமே கட்டணம் செலுத்த வேண்டும். இந்நடைமுறை 18.12.21 முதல் செல்லுபடியாகும்.
2ஜி நடனவிடுதியிலும் மற்றும் முகவுறை அணியமுடியாத இடங்கள்
எங்காவது முகவுறை அணியமுடியாது என்றால் அல்லது இருந்து உணவு உண்ணமுடியாது என்றால் இவ்விடங்களுக்குள் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களும், நோயிலிருந்து குணம் அடைந்தவர்களும் மட்டும், கோவிட் பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லை என்னும் சான்றுடன் உள்நுழையலாம்.
தொடர்வினை (பி.சி.ஆர்) பரிசோதனைச் சான்று 72 மணிநேரத்திற்கும் நோய் எதிர்ப்புத் திறனூட்டி (அன்ரிக்கேன்) பரிசோதனைப் பெறுபேறு 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இவ்விதி நடன விடுதிகள், மதுநிலையங்கள், முகவுறை அணியாகத் தொழிலற்ற விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் இவ்விதி பொருந்தும். ஊதும் இசைக்கருவிகளைக் கையாளும் இசைப்பயிற்சிக்கும் இது பொருந்தும். 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இவ்விதியில் விலக்கு அளிக்கப்படுகின்றது.
கடந்த நான்கு மாதத்திற்குள் இரு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டோர்களுக்கும் அதுபோல் கடந்த 4மாதத்திற்குள் நோயிலிருந்து முழுமையாகக் குணம் அடைந்தோருக்கும் இந்நோய்த்தொற்று சான்றிலிருந்துவிடுப்பு அளிக்கப்படுகின்றது.
நிகழ்வுகளில் அல்லது உணவகங்களில் 2ஜி விதியுடன் மேலதிகமாக நோய்த்தொற்று பரிசோதனைச் சான்றும் நடைமுறையில் இருப்பின் இருக்கையில் இருக்க வேண்டும் எனும் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
துணையுந்து புத்துயிர்ப்புத் தடுப்பூசி
கோவிட் தடுப்பூசி இரண்டினை முழுமையாகச் செலுத்திக்கொண்டோர்கள் 3வதாக துணையுந்தாகவும் புத்துயிர்ப்பாகவும் 3வது தடுப்பூசியினை 2ஆவது ஊசி செலுத்திய 4வது திங்கள் (மாதம்) முதல் செலுத்திக்கொள்ளலாம் என நலவாழ்வு அமைச்சர் அலான் பெர்சே தெரிவித்தார்.
முழுமையாகத் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்கு 3வது புத்துயிர்ப்புத் தடுப்பூசி இட்டுக்கொள்ளக் குறுஞ்செய்தியில் அல்லது மின்னஞ்சல் வழியில் எதிர்வரும் நாட்களில் அழைப்பு விடுக்கப்படும்.
நத்தார் பண்டிகை, பனிக்கால விடுமுறை மற்றும் தனியார் நிகழ்வுகள்
வீட்டில் உள்ளவர்களில் எவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு குணம் அடையவில்லை என்றாலும் அல்லது உரிய கோவிட் தடுப்பூசி இட்டுக்கொள்ளவில்லை என்றாலும் ஆகக்கூடியது 10 நபர்களே வீடுகளில் ஒன்றுகூடலாம்.
16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் இளையோர்களை எண்ணிக்கையில் சேர்க்கத் தேவையில்லை. அதற்கு மேற்பட்டவர்கள் முழு ஆளாக எண்ணிக்கையில் சேர்த்து எண்ண வேண்டும். தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் மற்றும் நோயிலிருந்து குணமடைந்தோர் உரிய சான்றுடன் தனியார் நிகழ்வுகளில் ஆகக்கூடியது 30 நபர்கள் ஒன்றுகூடலாம்.
உள்ளரங்கில் அல்லாது வெளியரங்கில் தனிப்பட்டு ஒன்றுகூடுவதானால் ஆகக்கூடியது 50 நபர்கள் கூடலாம்.
வெளியரங்கில் பொதுநிகழ்வு
இதன்போது தடுப்பூசி இட்டோர், நோயிலிருந்து குணமடைந்தோர் மற்றும் நோய்த்தொற்று பரிசோதனை செய்தோர் மட்டுமே பங்கெடுக்கலாம். இவ்வாறு நடைபெறும் வெளியரங்கு நிகழ்வில் ஆகக்கூடியது 300 நபர்களே பங்கெடுக்கலாம்.
வீடுகளிலிருந்தபடி பணிகள்
சுவிற்சர்லாந்து நடுவனரசு வீடுகளிலிருந்தபடி கடமைப்பணியாற்றப் பணித்துள்ளது. இதன்படி தொடுகை தொடர்பாடல்கள் குறைக்கப்படும் என அரசு நம்புகின்றது. ஆனால் அனைத்துப் பணிகளையும் இவ்வாறு செய்யமுடியாது. ஆகவே குறிப்பிட்ட இடத்தில் நேரில் சென்று பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பின் அவ்விடத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர்கள் கூட நேர்ந்தால் கட்டாயம் முகவுறை அணிந்திருக்க வேண்டும்.
இடைநிலைப் பாடசாலைகளில் முகவுறை
உயர் பாடசாலைகளிலும் மற்றும் ஏனைய பாடசாலைகளிலும் முகவுறை அணிய சுவிற்சர்லாந்து அரசு பணித்துள்ளது. மாநிலங்கள் தமது சூழலிற்கு ஏற்ப இந்நிலை பாடசாலைகளைக்காட்டிலும் கீழ்ப்பட்ட படிநிலைப் பாடசாலைகளிலும் முகவுறைப் பயன்பாட்டினை கடைப்பிடிக்க ஆணை வழங்க முன்மொழிந்துள்ளது.
சுவிற்சர்லாந்து நடுவனரசு இவ்வேண்டுகையினை விடுக்க முன்னரே பல மாநிலங்களும் தமது சிறார் நிலைப்பாடசாலைகளிலும் முகவுறைப் பயன்பாட்டினை கட்டாயமாக்கி உள்ளன.
மேல்நிலைப் பாடசாலைகளில் நடைபெறும் பரீட்சைகளின்போது 3ஜி விதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்திற்குள் நுழைவோர்
20.12.21 திங்கள் முதல் சுவிற்சர்லாந்திற்குள் நுழைவோர் உரிய தடுப்பூசிச் சான்றினை முன்வைக்க வேண்டும் அல்லது நோயிலிருந்து குணமடைந்த சான்றினைக் காட்ட வேண்டும். அவர்கள் கடந்த 72மணிநேரத்திற்குள் எடுத்துக்கொண்ட தொடர்வினை (பி.சி.ஆர்) நோய்த்தொற்றுப் பரிசோதனைச் சான்றினை அல்லது 24 மணிநேரத்திற்கு உட்பட்ட நோய் எதிர்ப்புத் திறனூட்டி (அன்ரிக்கேன்) பரிசோதனைப் பெறுபேற்றைக் காட்டவேண்டும்.
தடுப்பூசி இடாதோர் மற்றும் நோய்த் தொற்றுக்கு உட்படாதோர் சுவிசிற்குள் நுழையும்போதும், நாட்டிற்குள் நுழைந்த பின்னர் 4-7 நாளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்வினை நோய்த்தொற்று பரிசோதனை (பி.சி.ஆர்) சான்று காண்பிக்க வேண்டும்.
மருத்துவமனைகளுக்கு சுவிஸ் அரசின் பரிந்துரை
மாநில அரசுகள் தமது மாநிலத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகளின் பணி நெருக்கடி மற்றும் பேரிடர் நிலை நேராது தடுக்க தள்ளிவைக்கக்கூடிய அறுவை மருத்துவத்தை பின் தள்ளிவைக்க சுவிஸ் நடுவனரசு பரிந்துரைத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மருத்துவமனைகளின் பணி நெருக்கடிச்சுமைகள் குறையாது விடின் நடுவனரசு விரைந்து கலந்தாய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் உறுதி கூறப்பட்டது.
மலரும் 2022 நோயற்ற வாழ்வை குறைவற்ற செல்வமாக வழங்கட்டும்!