கனடாவில், தற்போது ஒருவரது வேலைத்திறன் மட்டத்தை தீர்மானிப்பதற்காக தேசிய தொழில் வகைப்பாடு (National Occupational Classification – NOC) என்ற விடயம் நடைமுறையில் உள்ளது.
கொஞ்சம் காலமாகவே, கனடா, தேசிய தொழில் வகைப்பாடுகளான NOC O, A, மற்றும் B ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்தி வந்தது. NOC O என்பது, நிர்வாகம் தொடர்பான பணிக்கானது. NOC A என்பது, பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களுக்கானது. NOC B என்பது, வர்த்தகம் மற்றும் கல்லூரியில் பட்டயப்படிப்பு அல்லது தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கானது.
எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் என்பது, பொருளாதார வகுப்பு புலம்பெயர்வோரை வரவேற்க கனடா பயன்படுத்தும் முக்கிய வழியாகும். இந்த எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம் வாயிலாக கிடைக்கும் பணிகள் NOC 0, A, மற்றும் B வகை தொழில்கள் செய்வோருக்கு மட்டுமே ஆனவைகள்.
ஆனால், NOC C மற்றும் D வகைப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப பல புலம்பெயர்தல் திட்டங்கள் உள்ளன. சமீப காலமாக, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும், மாகாண நாமினி திட்டங்களும், NOC C மற்றும் D புலம்பெயர் விண்ணப்பதாரர்கள் மீது கவனம் செலுத்துவருகின்றன.
இந்த NOC C வகை பணிகளுக்கு விண்ணப்பிக்க உயர்நிலைப்பள்ளி பட்டயப்படிப்பு ( high school diploma) ஒன்று தேவைப்படலாம். NOC D வகை பணிகளுக்கு ஏதாவது ஒரு வேலையின்போது கற்றுக்கொண்ட அனுபவம் போதும். NOC C வகை பணிகளில் இறைச்சி வெட்டும் தொழில் செய்பவர், ட்ரக் சாரதிகள் மற்றும் உணவகங்களில் உணவு பரிமாறுவோர் ஆகிய பணிகள் அடங்கும். NOC D வகை பணிகளில் பழங்கள் பறிப்பவர்கள், சுத்தம் செய்பவர்கள் மற்றும் எண்ணெய் வயல் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
இப்போது, NOC C மற்றும் D வகை பணி அழைப்புப் பெற்றவர்கள், அத்துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோர், நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பது குறித்து சில விடயங்களைப் பார்க்கலாம்
மாகாண நாமினி திட்டம் (The Provincial Nominee Program – PNP)
மாகாண நாமினி திட்டம், கனேடிய மாகாணங்கள், தத்தம் பொருளாதார மற்றும் மக்கள்தொகை வளர்ச்சித் திட்டங்களுக்காக, தாங்களே புலம்பெயர்தல் திட்டங்களை வகுத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். கியூபெக், Nunavut தவிர்த்து கிட்டத்தட்ட பெரும்பாலான மாகாணங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அத்திட்டத்தின் கீழ், NOC C மற்றும் D வகை பணி அழைப்புப் பெற்றவர்கள், அத்துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோர், நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளன.
(எந்தெந்த மாகாணத்தில் என்னென்ன திட்டம் உள்ளது என்பதை, செய்தியின் முடிவில் உள்ள Linkஇலிருந்து அறிந்துகொள்ளலாம்)
இதுபோக, வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணி, மற்றும் வீடுகளில் உதவியாளர் பணி ஆகியோருக்காக Home Child Care Provider Pilot and Home Support Worker Pilot என்ற திட்டங்கள் உள்ளன.
விவசாயம் மற்றும் உணவுத்துறை புலம்பெயர்தல் திட்டம் (Agri-food Immigration Pilot)
இத்திட்டம், இறைச்சி மற்றும் உணவு பதப்படுத்துதல், காளான் மற்றும் பசுமை இல்ல தாவரங்கள் வளர்ப்பு முதலான துறைகளில் முழு நேரப் பணி செய்பவர்களுக்கான பெடரல் புலம்பெயர்தல் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நிரந்தர வாழிடம் பெற, நீங்கள் குறைந்தது 12 மாதங்கள் மேற்கூறப்பட்ட ஒரு தொழிலில் முழு நேரம் பணி செய்திருக்கவேண்டும். உங்கள் பணி அனுமதி, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
அத்துடன், உங்களுக்கு ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் குறைந்தது CLB level 4 மட்டத்தில் மொழிப்புலமை இருக்கவேண்டும். நீங்கள் உயர்நிலைப் பள்ளி கல்வி கற்றிருக்கவேண்டும். நீங்கள் செய்த பணி கியூபெக்குக் வெளியில் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.
இது போக, கிராமப்புற மற்றும் வடக்கு புலம்பெயர்தல் திட்டம் (Rural and Northern Immigration Pilot) என்றொரு திட்டம் உள்ளது.
இந்த திட்டத்திற்கு தகுதி பெற, பெடரல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் விதிமுறைகள் உள்ளன.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், மற்ற பல புலம்பெயர்தல் திட்டங்களைப்போலவே, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு உங்களிடம் போதுமான பணம் இருக்கிரது என்பதை நிரூபித்துக் காட்டுவது, இந்த திட்டங்களுக்கும் பொருந்தும்!