மட்டக்களப்பு மாநகர சபை பதவி நிலை சிரேஷ்ட உத்தியோகத்தர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு சிலரால் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் பொருட்கள் கையூட்டாக கோரப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபை பதவிநிலை உத்தியோகத்தர் எனக்கூறிக் கொண்டு எவராவது கையூட்டுகள் கோரினால் அதனை வழங்க வேண்டாம் எனவும் , இந்த விடயம் குறித்து மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் அறிவித்துள்ளார்.
அந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய,
01. சிகை அலங்கார நிலையத்தில் சென்று முடிதிருத்தம் செய்து விட்டு அதற்கான கட்டனம் செலுத்தாமை வெளிவந்தமை.
02. கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இறைச்சி கொள்வனவு செய்த பின்னர் அதற்கான கட்டனம் செலுத்தாமை.
03. வன்பொருள் விற்பனை நிலையங்களில் மின்குமிழ்கள் , சீமெந்து மற்றும் கம்பிகளை பணம் செலுத்தாமல் கொள்வனவு செய்தமை. உள்ளிட்ட பல செயற்பாடுகள் உள்ளடங்குகின்றன.
எனவே இலஞ்சம் கோரல் அல்லது பொருள் இலஞ்சம் கோரல் தொடர்பாக எம்மிடம் முறைப்பாடு செய்யும் இடத்து குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடன் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலஞ்சம் கோருவோருக்கு மாத்திரம் அல்லாமல் யாரேனும் சேவை பெறுனர் அல்லது வழங்குனர் இலஞ்சம் கொடுப்பின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கையூட்டுகள் உங்களிடம் கோரப்படும் பட்சத்தில் முறைப்பாடுகளை நேரடியாகவோ அல்லது தொலைபேசி (065 222 7066) மூலமாக அல்லது மின்னஞ்சல் (tsaravanapaban@gmail.com ) மூலமாக மற்றும் எனது முகநூல் பக்கம் ஊடாகவும் அறியத்தரும்படி பொதுமக்கள் , வர்த்தகர்கள் மற்றும் துறைசார் அமைப்பினரிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.