தென்னிலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்கு செல்வதற்காக விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஆளும்தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கு மத்தியில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பங்குபெற்றுவதற்கு முடியாத நிலைமை உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமது தொகுதிகளுக்கு வருவதும் ஆபத்தான நிலைமையாகியுள்ளதென பாதுகாப்பு கோரும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
ஏற்கனவே உரப் பிரச்சினையால் வருமானம் வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரத்தில் நெருக்கடியை எதிர்நோக்கும் விவசாயிகள் தற்போது வரையிலும் மிகவும் கோபமாக செயற்பட்டு வருவதாக உறுப்பினர்களின் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
கரிம திரவ உரம் என கூறி வழங்கப்பட்டுள்ள துர்நாற்றம் வீசும் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாதென விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் பிரதேச பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு வரும் வரை அந்த கேன்களுடன் மக்கள் காத்திருப்பதாக ஊடகங்களில் பல முறை குறிப்பிட்டுள்ளனர்.