மலேஷியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் உதய பெரேரா கிளிநொச்சியில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னாள் தளபதியாகவும், இறுதிக்கட்ட ஆயுத மோதலின் போதும் அதன் பின்னரான நடவடிக்கைப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது , சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 5ம் திகதி உதய பெரேராவும் அவரது குடும்பத்தினரும் கொழும்பு-சிங்கப்பூர் ஏர்லைன் விமானத்தில் ஏற முயன்றபோது பயணத் தடை குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் சிங்கப்பூரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன் ஊழியர்கள் அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து எச்சரிக்கையைப் பெற்றதாக அவரிடம் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் அவருக்கு பல நுழைவு விசா வழங்கப்பட்ட போதிலும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் சுனில் ரத்நாயக்க ஆகிய இரண்டு இராணுவத்தினர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத் தளபதியும் இராணுவத்தின் 58ஆவது பிரிவின் தலைவருமான சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையைத் தொடர்ந்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.