சென்னையில் நேற்று திடீரென மழை பெய்ததால், பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை கடற்கரையில் 24 செ.மீட்டர் மழை பெய்தது. இதனால் கடற்கரை குளம்போல் காட்சியளித்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தார்.
இன்று காலையில் இருந்து மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்றைய நிலை ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோர் மழை வெள்ளத்தால் கஷ்டப்பட்டனர். 6 மணிக்கு வேலை முடிந்து புறப்பட்ட பலர் போக்குவரத்து நெரிசல் காரணமாக நள்ளிரவுதான் வீட்டிற்கு சென்றடைய முடிந்தது.



















