பட்டினிக்கு இடமளித்து மக்களை கொலை செய்யாது கொல்லும் இந்த அரசாங்கம் ஜன படுகொலை அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) விமர்சித்துள்ளார்.
கொழும்பு கொலன்னாவையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்படுகிறது. மக்களின் துயரங்களை தற்போதைய அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை.
குழாய் மாறியுள்ளதால், எரிவாயு பிரச்சினையை இன்னும் சில வாரங்களுக்கு தீர்க்க முடியாது என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
எரிவாயு சம்பந்தமான அனர்த்தம் ஏற்பட்ட நாளில் இருந்து அது பற்றிய அனைத்து தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு தெரியப்படுத்தியது.
எனினும் துறைக்கு பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் உட்பட முழு அரசாங்கமும் அவற்றுக்கு பதிலளிக்காது தப்பியோடியது. வீடுகள் வெடிக்கும், சமையல் அறை தீப்பிடிக்கும், உயிரிழப்புகள் ஏற்படும் இந்த பாரதூரமான அனர்த்தத்தை உருவாக்கியவர்கள் துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள்.
இந்த இரண்டு அமைச்சர்களும் பொய்களை கூறினர். தற்போது இவர்கள் சார்பில் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பொய்களை கூற முன்வந்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் ஊடாக பிணத்தின் மீது ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மக்களின் பிரச்சினைகள் குறித்து உணரவில்லை.
மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்திற்கு மத்தியில் இருக்கும் நிலையில், அரசாங்கத்தினருக்கு எதிராக ஹூ சத்தமிட்டு தமது கோபத்தை காட்டி வருகின்றனர்.
அரசாங்கம் இந்த மக்களை பின் தொடர்ந்தும் சென்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கும் அளவுக்கு கீழ் நிலைமைக்கு சென்றுள்ளமை வெட்கத்திற்குரியது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.