நாட்டு மக்கள் கடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் சிலாபம் மாரவில பிரதேசத்தில் 800 பேருக்கு ஆடம்பர நத்தார் விருந்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆடம்பர நத்தார் விருந்தை ராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த(Sanath Nishantha) வழங்கியுள்ளார்.
இந்த நத்தார் விருந்துக்கு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஆதரவளித்த 157 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த 53 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் நத்தார் விருந்தை ஏற்பாடு செய்வது சனத் நிஷாந்தவின் திட்டமாக இருந்துள்ளது.
எனினும் ஜனாதிபதியே இந்த திட்டத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நத்தார் விருந்துக்கு அழைப்பதற்காக சனத் நிஷாந்த, ஜனாதிபதியை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.
அப்போது வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற ஆதரவளித்த 157 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துக்கான அழைப்பை விடுக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதனடிப்படையில் 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி, அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகள், சாரதிகள், மாரவில பகுதியை சூழவுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளுக்கு சனத் நிஷாந்த அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நத்தார் விருந்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.