எயார் மொரீஷியஸ் விமானத்தில் விமானக் கழிப்பறையின் குப்பைத்தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் விமான ஊழியர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
எயார் மொரீஷியஸ் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்த ஆண் குழந்தையை ஈன்றெடுத்ததாக நம்பப்படும் மடகாஸ்கரைச் சேர்ந்த 20 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விமானம் மடகாஸ்கரிலிருந்து புறப்பட்டு ஜனவரி முதல் திகதி மொரீஷியஸில் தரையிறங்கியது. இதன்போது விமானத்தின் வழக்கமான சோதனையின்போது விமான நிலைய அதிகாரிகள் கழிப்பறை குப்பை தொட்டியில் குழந்தையைக் கண்டெடுத்தனர்.
இதனையடுத்து குழந்தை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண் அது தன்னுடைய குழந்தையல்ல என்று முதலில் கூறிய நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அவர் குழந்தையை ஈன்றெடுத்தது தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வெளியானபின்பு சிசுவைக் கைவிட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படும் என தெரிவிக்கப்படும் அதேவேளை, கைதான பெண் இரண்டு ஆண்டு வேலை அனுமதி அட்டையின்கீழ் மொரீஷியஸிற்கு வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.