இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை தீர்க்க, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது
இதன் மூலமே நாட்டின் பொருளாதார மற்றும் ஏனைய நடைமுறை நெருக்கடிகளுக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிதி நெருக்கடிகள்,பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தி வருகின்றன.
பணவீக்கம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு, பல சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கையின் தரவரிசைக் குறைப்பு, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டமை, சில வெளிநாட்டு விமான நிறுவனங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமை, மின்சார மற்றும் எரிபொருள் நெருக்கடி பற்றிய எச்சரிக்கைகள் என்பன இன்று நாட்டின் நிலையை பிரதிபலிக்கும் அம்சங்களாக உள்ளன.
இந்தநிலையில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கொரோனா தொற்று நோய் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளமையால், அரசாங்கம் அசாதாரண சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நிரந்தர தீர்வு ஒன்றை ஏற்படுத்த, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் உதவியை நாடுமாறு வலியுறுத்தியுள்ளது