இந்த நோயை கண்டறிவது என்பது மிகவும் சிக்கலான ஒன்று. ஏனென்றால், ரத்த மற்றும் சளி சோதனைகள், நெஞ்சுப்பகுதி எக்ஸ்-ரே போன்றவற்றால் இதனை கண்டறிவது கடினம்.
காசநோய் அல்லது டிபி (TB) எனும் நோயானது உலகில் தற்பொழுது பரவலாக காணப்படும் ஒரு நோய். உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினருக்கு காசநோய் தொற்று ஏற்படுகிறது. இந்த காசநோய் உருவாக காரணமாக இருப்பது டியூபர்குளோசிஸ் என்ற ஒரு பாக்டீரியம் ஆகும். பொதுவாக இந்த பாக்டீரியமானது உடலின் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலை முக்கியமாக பாதிக்கிறது.
பின்பு ரத்த ஓட்டத்தில் இந்த பாக்டீரியம் கலப்பதன் மூலம் உடலின் பிற பாகங்களுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் உறுப்புகளில் மிக முக்கியமாக இருப்பது கருப்பை மற்றும் கருக்குழாய். முதலில் காச நோயானது இருமலாக ஆரம்பிக்கிறது.
இந்த இருமல் ஒரு மூன்று வாரங்களுக்கு கடுமையாக இருக்கும், அதனோடு சளியில் ரத்தம், இரவில் வியர்த்தல், காய்ச்சல், உடற்சோர்வு, பசியின்மை, எடை குறைவு போன்ற அறிகுறிகளும் தென்பட ஆரம்பிக்கும். உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், சத்து குறைபாடு ஏற்பட்டு, மேலும் பல பிரச்சினைகள் உண்டாக வழிவகை செய்கிறது.
நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பு உள்ள நபர்கள், அதாவது சர்க்கரை நோய், கேன்சர் நோயாளி, சுகாதாரமாக இல்லாத நபர், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவி விடுகிறது. இந்த உலகில் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு பிரச்சனை ஏற்பட இந்த காசநோய் தொற்று ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.
ஆனால் இந்த நோயானது மூச்சுக்குழலை தவிர தண்டுவடம், குடல், நிணநீர் தட்டுகள் மற்றும் தோலினை பாதிக்கிறது. அதே சமயத்தில், கருப்பையும் கருக்குழாயும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தை நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெரும் 1-2 சதவீத பெண்களுக்கு கருப்பை காசநோய் இருக்கிறது.
இந்த காசநோயின் மிகப்பெரிய சவால் என்ன வென்றால், முதலில், நிறைய நாட்களுக்கு எந்தவொரு அறிகுறியும் தெரியாது. ஆனால் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் பொழுது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் இருண்டு விடுவதாக, ஐவிஎஃப் மற்றும் இனப்பெருக்க அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ராஜலட்சுமி வாலவல்கர் கூறுகிறார்.
பிறப்புறுப்பு காசநோய் பொதுவாக முதலில் கருக்குழாயில் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்படும் 100% பேருக்கும் கருக்குழாயில் சிறிதளவேனும் சேதம் ஏற்பட்டு விடுகிறது. இந்த கருக்குழாய் பாதிப்படைவதால் விந்து இயற்கையாக கருக்குழாயை கடந்து சென்று கரு முட்டையை அடைய முடியாததால் மலட்டுத் தன்மை ஏற்பட்டு விடுகிறது.
காசநோயால் சேதமடைந்த கருப்பைகளில் சீழ் நிரப்பப்பட்ட நீர்கட்டிகள் உருவாவதன் மூலம் கருமுட்டைகள் நிரந்தரமாக அழிந்து விடுகின்றன. அது மட்டுமில்லாமல், முன்கூட்டியே கருப்பை செயலிழக்கலாம், மாதவிடாயும் நின்று போகும் நிலை ஏற்படலாம்.
கருவுறாமைக்கு ஆளான ஒரு பெண்ணில் முன்னர் விவரிக்கப்பட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும், அதோடு இடுப்பு பகுதியில் வலி மற்றும் மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை ஆகியவை இருந்தாலும் பிறப்புறுப்பு காசநோய்க்கான சோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டும்.
இந்த நோயை கண்டறிவது என்பது மிகவும் சிக்கலான ஒன்று. ஏனென்றால், ரத்த மற்றும் சளி சோதனைகள், நெஞ்சுப்பகுதி எக்ஸ்-ரே போன்றவற்றால் இதனை கண்டறிவது கடினம். நோய் உறுதியான டன், மருத்துவர் பரிந்துரைத்த டிபி எதிரிப்பு மருந்துகளை (AKT / ATT) ஆறு மாதத்தி ருந்து ஒரு வருடம் வரை எடுத்து கொள்ள வேண்டும்.
சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம், இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். இருந்தாலும் சிகிச்சைக்கு பின்பு, துரதிர்ஷ்டவசமாக, நிறைய பேருக்கு சிறிய அளவில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நல்ல சுகாதாரமான பழக்க வழக்கங்களாலும், சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், சரியான அளவில் உடல் எடையை பேணிக்காப்பதன் மூலமும் டிபி நோயிலிருந்து ஒருவர் சீக்கிரம் குணமடைய முடியும்.
தடுப்பது எப்படி?
* பொது ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருப்பது காசநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
* அதுமட்டுமில்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான ஊட்டச்சத்து மற்றும் உணவு, தினசரி உடற்பயிற்சி, மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்ப்பது மற்றும் நல்ல உடல் எடையுடன் இருப்பது போன்ற பழக்கங்களால் காசநோயைத் தடுக்கலாம்.
* அதே போல், ஒருவர் சுகாதாரமாக இருப்பதன் மூலமும் மற்றும் இருமல் வரும் போது வாயை மூடுவது, பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது போன்ற செயல்கள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.
காநோயினால் இனப்பெருக்க உறுப்புகள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம். புதிதாக கண்டறியப்பட்டுள்ள காசநோய் எதிர்ப்பு மருந்துகள், காச நோய் பாதித்த ஒருவரை குணப்படுத்துகின்றன. ஒரு வேளை டிபி நோயினால் ஏற்படும் சேதம் மிக அதிகமாக இருந்தால், உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
எனவே உங்களுக்கு காசநோய் இருந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உங்களுக்கு மறுபடியும் தாய்மை நிலை அடைய நிறைய வாய்ப்புகளும், மருத்துவ வசதிகளும் வந்து விட்டன.
இருப்பினும், நோய் வந்த பின் அதற்கான சிகிச்சை எடுப்பதை விட, நோய் வருவதற்கு முன்னரே, மேல சொன்ன அதற்குண்டான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.