பெண்கள் பயிற்சி பெற்றால் அவர்களின் உடல் நலம் மேம்படும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் இளமையை தக்க வைத்துக்கொள்ள முடியும்
பழங்காலத்தில் போர்க் கலையில் தமிழ் மன்னர்கள் சிறந்து விளங்கியதற்கு பல வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. தற்காப்பு கலைகளிலும் தமிழர்கள் முன்னோடிகளாகவே இருந்து வந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியால் பல்வேறு கலைகள் அழிவின் விளிம்புக்கு சென்று விட்ட நிலையில், ஒருசில நல்ல உள்ளங்களின் முயற்சியால் பாரம்பரிய தற்காப்பு கலைகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த செந்தில் கண்ணன், மறந்துபோன பல பாரம்பரிய கலைகளை மீட்டு, இளைஞர்களுக்கு முறையாக கற்றுக்கொடுக்கிறார்.
‘‘உலக அளவில் தமிழ் சமூகம் உச்சத்தை தொடுவதற்கு தமிழரின் பண்டைய கால போர்க்கலைகள் ஆணி வேராக இருந்தன. அந்த போர்க்கலை பயிற்சிகளுக்கு முன்பு உடலை தயார்படுத்திக் கொள்ள தேகப் பயிற்சி தேவைப்பட்டது. இதற்கு முக்கியமான உபகரணமாக இருந்தது, கர்லா கட்டை தான். தேகப் பயிற்சியில் முழுமையாக ஈடுபடும்போது மனிதன் நினைத்த வகையில் வளைத்துக்கொள்ள உடல் தயார் நிலையில் இருக்கும். இதன் மூலம் உடலும், மனமும் வலுப்பெறும். ஆனால் அத்தகைய சிறப்புமிக்க கர்லா கட்டை பயிற்சி கலை தற்போது பலருக்கு மறந்தே போய்விட்டது. அதை மீட்டெடுப்பதே என்னுடைய மிக முக்கிய வேலை’’ என்று உற்சாகமாக பேச தொடங்கும் செந்தில் கண்ணன் கர்லா கட்டையின் வகைகளையும், அதன் பயன்களையும் பகிர்ந்து கொண்டார்.
‘‘கை கர்லா, புஜக்கர்லா, தொப்பை கர்லா, குஸ்தி கர்லா, பிடி கர்லா, படி கர்லா என 6 வகை கர்லா பயிற்சிகள் உள்ளன. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு வகை கர்லா பயன்படுத்தப்படும். கை கர்லா- முதல் முதலில் பயிற்சி பெற பயன்படுத்தப்படும். புஜக்கர்லா-புஜம் பலம் பெறும். தொப்பை கர்லா-தொப்பையை குறைக்க உதவும். பிடி கர்லா-போர் வீரர்கள் ஆயுதங்கள் பயன்படுத்துவது. குஸ்தி கர்லா- குஸ்தி வீரர்களுக்கானது. படி கர்லா- பெண்கள் பயன்படுத்துவது. கர்லாவில் மொத்தம் 64 சுற்றுகள் உள்ளன. இதில் ஒரு சுற்று கற்றுக்கொண்டாலே போதும். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முடியும்’’ என்றவர், தமிழர்களின் பண்டைய போர் கலைகளை மீட்டு அந்த பாரம்பரியத்தை இளைய தலைமுறையினரிடையே மீண்டும் கொண்டு வர புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் ஜோதி குருகுலம் என்ற பயிற்சி மையத்தை அமைத்து, அதன்மூலம் பயிற்சி அளித்து வருகிறார். இங்கு கர்லா கட்டை, சிலம்பம், கதை, சிலம்பு, மல்யுத்தம், வர்ம தெரபி, சித்தா, யோகா, சித்தா யோகா தெரபி, தியானப் பயிற்சி, சாந்த யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை கற்றுக் கொடுக்கிறார்.
‘‘கர்லா கட்டை, கதை, வாள் போன்றவற்றை சுற்ற முறையாக பயிற்சி பெற வேண்டும். இந்த கலையை கற்றுக் கொள்வதற்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லை. ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம். ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்ப கருவிகளின் எடை மாறுபடும். பண்டைய தமிழர்களின் போர் பயிற்சியில் கர்லா கட்டை முக்கிய பங்கு வகித்தது. இந்த கலையின் சிறப்பை உணர்ந்து வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியை விரும்பிச் செய்கின்றனர்’’ என்றவர், பாரம்பரிய தற்காப்பு கலைகளின் நன்மைகளை பகிர்ந்து கொள்கிறார்.
‘‘இந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளும்போது சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், கண் பார்வை குறைபாடு, வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. பெண்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகளை நெருங்க விடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும். உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். பெண்கள் பயிற்சி பெற்றால் அவர்களின் உடல் நலம் மேம்படும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் இளமையை தக்க வைத்துக்கொள்ள முடியும்’’ என்ற தகவலோடு விடைபெற்றார்.
‘‘கை கர்லா, புஜக்கர்லா, தொப்பை கர்லா, குஸ்தி கர்லா, பிடி கர்லா, படி கர்லா என 6 வகை கர்லா பயிற்சிகள் உள்ளன. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு வகை கர்லா பயன்படுத்தப்படும்’’