நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் தீர்வு என்ன என்பது தொடர்பில் வெளிப்படுத்தவேண்டும். கடன் பெற்றுக்கொண்ட நாடுகளுடன் இருதரப்பினரும் கலந்துரையாடி எமது கடன் தவணையை நீடித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களின் தரப்படுத்தலை நாங்கள் ஏற்றுக்கொண்டு, அதனை சரிசெய்யவேண்டும். கடன் பெறும் விடயத்தில் அந்த நிறுவனங்களின் தரப்படுத்தல் முக்கியமாகும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று உணவு பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, வாழ்வாதார பாதுகாப்பு உட்பட இராணுவ பாதுகாப்பு என நாட்டின் அனைத்து பாதுகாப்பு துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைதுசெய்வதாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாகவுமே அரசாங்கம் தெரிவித்திருந்தது. அது இடம்பெற்றிருக்கின்றதா? ஈஸ்டர் தாக்குதலால் அதிக பாதிப்பு ஏற்பட்டது கிறிஸ்தவ மக்களுக்காகும். அவர்களுக்கு நியாயம் கிடைத்ததா?. இதுதொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கர்த்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை நிராகரித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி வெளிப்படப்போவதில்லை என்றே அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பொரளை தேவாலயத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாகவும் பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கை திருப்தியில்லை என்றே கர்தினல் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் நாங்கள்தான் சிறந்தமுறையில் செய்தோம் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் இதுவரை மொத்தமாக 15243 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அது 2.55வீதமாகும்.
இதன் பிரகாரம் மரணவீதங்களில் உலகில் கொவிட் மரணங்களில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. அப்படியாயின் எப்படி நாங்கள்தான் சிறந்த முறையில் செய்திருக்கின்றோம் என தெரிவிக்க முடியும் என்றார்