மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் 60 வீதமான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகள் வழமையாக ஆண்டு தோறும் 5 முதல் 6 வீதம் வரையில் உயர்வடையும் என்ற போதிலும், கடந்த மாதம் பொருட்களின் விலைலகள் 14 வீதமாக உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய இயலுமை மக்களுக்கு கிடையாது எனவும், மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை பட்டினி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அத்தியாவசியமற்ற அபிவிருத்தி திட்டங்களை ஒத்தி வைத்து விட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.