இலங்கையின் வடக்கு பகுதி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தமிழகம் – ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஷ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 760இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.
தற்போது தமிழக கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய கடற்றொழில் பகுதிகளில் இலங்கை நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சோ்ந்த கடற்றொழிலாளர்களும் தொழில் செய்து வருகின்றனா்.
அப்பகுதியில் ராமேசுவரத்தைச் சோ்ந்த சில கடற்றொழிலாளர்கள் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால், இலங்கை வடகிழக்குப் பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகள், கூண்டுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே தமிழக கடற்றொழிலாளர்களின் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணம் நீரியல் துறை அலுவலகம் முன்பாக, இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் தொடா்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் காரணமாக கச்சத்தீவு முதல் தலைமன்னாா் வரையில் இலங்கை கடற்படையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சமடைந்த நிலையில், ராமேஷ்வரம் கடற்றொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் பாரம்பரிய இடத்தில் கடற்றொழிலை மேற்கொள்ள இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஷ்வரம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.