பரீட்சைக்குச் செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு நோய் நிலைமைகள் காணப்படுமாயின் அவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் -19 தொற்றுறுதியானவர்கள் சாதாரண பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியும்.
பரீட்சார்த்தி ஒருவருக்கு கோவிட் -19 தொற்றுறுதியாகுமாயின் அவரை வைத்தியசாலையில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.
எனவே, பரீட்சைகளின் போது உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.