சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுகாதார அமைச்சிற்குள் நுழைய முயற்சித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலகம் அடக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பள உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி 18 சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள், துணை மருத்துவர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.