சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் தொழிநுட்ப ரீதியான ஆதரவைக் கோரியிருப்பதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நிபுணர்குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது குறித்து சர்வதேச நாணய நிதியம் பதிலளிக்கையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நிதியமைச்சில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பேரண்ட நிதிப்பிரிவின் இயலுமையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகள் மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடததக்கது.
மேலும், கொழும்பிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு நான்காவது மீளாய்வு பணிகளைப் பூர்த்தி செய்திருப்பதாகவும், அது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையில் கலந்துரையாடப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.