கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும் இரண்டு தொழில்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
இன்று உலகம் முழுவதும் பயணிகளுக்கு வழி காட்டும் செயலியாக கூகுள் மேப் இருக்கிறது. பெரிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகிள் மேப்பில் இல்லாத இடங்களே இல்லை. கடைகள், சுற்றுலா தளங்கள் என நமக்கு வேண்டிய இடங்களையும் கூகுள் மேப் மூலம் கண்டடையலாம். இந்நிலையில் கூகுள் மேப் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்பை மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி கூகுள் மேப்பில் காட்டப்படும் அனைத்து வணிக நிறுனங்களும் சரிபார்க்கப்படவேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்கள் மேப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த சரிபார்க்கும் தொழிலையே அடிப்படையாக கொண்டு சில நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்ட வணிக உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி கூகுள் எதிர்பார்க்கும் வகையில் வணிகத்தை மேப்பில் நிறுவுவது எப்படி என ஆலோசனை வழங்குகின்றன.
அதேபோல கூகுள் மேப்பில் இல்லாத கடைகளை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து முழுமையான தகவல்களை பெற்று, கூகுள் மேப்பில் அப்டேட் செய்யலாம். இவ்வாறாக அந்த கடைகளுக்கும் உதவுவது மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
இதற்காக நிறுவனங்கள் அதிகபட்சம் 3700 ரூபாய் வரை வசூலிக்கின்றன. இந்த சேவையை தனிப்பட்ட நபர்களும் வணிக நிறுவனங்களை தொடர்புகொண்டு செய்யலாம்.
அதேபோல ’மேப் அனலிசிஸ்ட்’ என்ற சேவையையும் தனிப்பட்ட நபர்கள் வழங்கலாம். இதன்படி கூகுள் நிறுவனம் தனது மேப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக லயன்பிரிட்ஜ் உள்ளிட்ட ஆன்லைன் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த ஆய்வு நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை திரட்டுகின்றன. இதற்காக குறிப்பிட்ட தொகையையும் வழங்குகின்றன. தனிநபர்கள் இதற்கு உதவுவது மூலம் குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கலாம்