மக்களின் சுதந்திரம் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் ஜனநாயக அமைப்பிலிருந்து தாம் விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், அதில் கிடைக்கும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார். மகாவலி ரன்பிம பத்திரம் வழங்கும் நிகழ்வு எம்பிலிப்பிட்டிய மகாவலி மைதானத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “அந்நியச் செலாவணி பற்றாக்குறை தற்போது நாடு எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சனை.
கோவிட் தொற்றுநோயால் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி இழப்பு இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். முந்தைய அரசுகள் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
இந்த பிரச்சினைகள் தாமோ அல்லது அரசாங்கத்தின் பிழையினால் ஏற்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு எதிர்க்கட்சிகள், மக்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு பொறுப்பான தரப்பினரும் இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.