ஒவ்வொரு தருணத்திலும், வாழ்க்கை உங்களுக்கு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
குடும்பம், வேலை, தொழில், உறவுகள், சமூகம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் மூலம் உங்களை நீங்களே தாழ்வாக நினைக்கிறீர்களா? இதன் காரணமாக எதன் மீதும் ஈடுபாடு கொள்ள முடியாமல் போகிறதா? இவற்றையெல்லாம் வெற்றிகரமாக கடந்து சாதித்த பெண்கள் பின்பற்றிய வழி, ‘தங்களை தாங்களே நேசித்தது தான்’. அதன் மூலம் தடைகளையும், பிரச்சினைகளையும் வெற்றிகரமாகக் கடந்து, அவர்களை அவர்களே உயர்த்திக்கொண்டார்கள். அதற்காக அவர்கள் கூறிய வழிகள் இங்கே…
உங்களை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்துங்கள்
மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது இயற்கையானது; அதேசமயம் ஆபத்தானது. உங்களைப்போன்று நீங்கள் மட்டுமே இருக்க முடியும். மற்றவரோடு உங்களை ஒப்பிடுவதற்கு பதிலாக, உங்கள் நிறைகளைக் கொண்டு வாழ்க்கை பயணத்தில் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.
மற்றவரின் கருத்துகளை எண்ணி கவலைப்படாதீர்கள்
சமூகம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறது? சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள்? என்பதை நினைத்து கவலை கொள்ளாதீர்கள். எல்லோரையும் உங்களால் மகிழ்ச்சிப்படுத்த முடியாது. இந்த மனநிலை, உங்கள் லட்சியத்தை நோக்கிய பயணத்தின் வேகத்தைக் குறைக்கும்.
தவறுகளை எண்ணி கலங்காதீர்கள்
தவறுகள் செய்வது மனித இயல்பு. எல்லாவற்றிலும் சிறந்தவர் என்று யாரும் கிடையாது. தவறுகள் செய்யுங்கள். அதில் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முடியும். தோல்விகள் வாழ்வில் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. அவை எல்லா காலத்திலும் நமக்கு உதவும்.
உங்கள் உருவத்தை நினைத்து வெட்கப்படாதீர்கள்
அழகாக இருப்பது, ஒல்லியாக இருப்பது, குண்டாக இருப்பது இவை எதுவுமே உங்களுடைய மதிப்பை அதிகரிப்பது இல்லை. தன்னம்பிக்கையோடு நீங்கள் செய்யும் பயனுள்ள செயல்களே உங்களை உயர்த்துகின்றன. உங்கள் உருவத்தை நினைத்து வருந்தாதீர்கள். உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் உடைகளை அணியுங்கள். உங்களுக்கு பிடித்தவாறு ஒப்பனை செய்து கொள்ளுங்கள்.
தவறானவர்களை விலக்குவதற்கு தயங்காதீர்கள்
உங்கள் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நபர்களையும், அந்த விளைவுகளைப் பற்றி எந்த கவலையும் அடையாத நபர்களையும், விலக்கி வைப்பதற்கு தயங்காதீர்கள்.
பயத்துக்கான காரணங்களை ஆராயுங்கள்
தவறுகள் செய்வது இயல்பானது என்பது போல, பயம் கொள்வதும் இயல்பானதே. உங்களை பயம்கொள்ளச் செய்யும் விஷயங்களை நிராகரிக்காதீர்கள். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். எதனால் உங்களுக்கு பயம் ஏற்படுகிறது? அதை எவ்வாறு மாற்றுவது? என்று ஆராயுங்கள். இதன் மூலம் நீங்கள் பயத்திலிருந்து வெளிவர முடியும்.
வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்
ஒவ்வொரு தருணத்திலும், வாழ்க்கை உங்களுக்கு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்
இதை செய்வதற்கு ஒருபோதும் தயங்க வேண்டாம். உங்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்கு பிடித்தவற்றை செய்வதாகவும் இருக்கலாம் அல்லது ஓய்வு எடுப்பதாகவும் இருக்கலாம்.