இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய பிரஜைகள் பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அவர்களின் திட்டமிட்ட கால எல்லையை நிறைவு செய்துள்ள போதிலும், அங்கு நடக்கும் யுத்தம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் உக்ரேன் சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு உக்ரேனிய சுற்றுலா பயணிகள் பணம் இல்லாமல் தமது ஹோட்டல் அறைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பலர் இலங்கையர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்களுக்கு தேவையான உணவுகளை மக்கள் வழங்கி வருவதாக தெரிய வருகிறது.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு இது குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை என உனவட்டுன பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இக்கட்டான நிலையில் இலங்கை மக்களின் அன்புக்கு நன்றி தெரிவிப்பதாக உக்ரேனிய பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாட்களாக எங்களுக்கு தூக்கம் வரவில்லை. எங்கள் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.. நாங்கள் உதவி கேட்டோம் ஆனால் அது வெற்றிபெறவில்லை. எங்களால் எந்த தகவலையும் பெற முடியவில்லை, நாங்கள் நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என உக்ரேன் சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளனர்.
போரும் வன்முறையும் நல்லதல்ல நான் உக்ரேனியனாக இருந்தாலும் என் மனைவி ரஷ்ய நாட்டவராகும்.. போர் தொடர்ந்தால் அதன் விளைவுகளை இருவரும் அனுபவிக்க வேண்டி வரும். எனவே போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.