இன்றைய சூழலில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் தலைமுடி உதிர்வது, பொடுகு தொல்லை, இளநரை, தலை வறட்சி என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதிலும் ஒரு சிலருக்கு தலை அரிப்பு பிரச்சனை இருக்கும், பொது இடம் என்று கூட பார்க்கலாம் தலையை சொறிந்த வண்ணம் இருப்பார்கள்.
தலையின் மேல் உள்ள தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு காரணமாக செதில் செதிலாக மாவுபோன்று கொட்டுகிற நிலை, ஈறு மற்றும் பேன்கள் உருவாவது, பொடுகு தொல்லை, இதை தொடர்ந்து உடலில் அரிப்பு, சொரி போன்றவை ஏற்படும், எனவே தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்து கொள்வது அவசியம்.
அருமையான வீட்டு வைத்திய முறைகள்
* ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூண்டு பற்களை லேசாக தட்டிபோடவும். வெண்மிளகு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் தலையில் உண்டாகும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும். உடலுக்கு தேய்த்து குளிப்பதால் அரிப்பு பிரச்னை நீங்கும்.
* ஃப்ரெஷ்ஷான இஞ்சியை ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கி சிறு பொடியாக நறுக் குங்கள். அதை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து சாறை வடிகட்டுங்கள் அதிக அளவு தண்ணீர் விட வேண்டாம். சாறு கெட்டியாக வந்ததும் அதனுடன் சம அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து விடுங்கள். தலையில் ஸ்கால்ப் பகுதியில் படும்படி மசாஜ் செய்யுங்கள்.விரல்களை விட சுத்தமான காட்டனில் சாறை நனைத்து தலையில் ஸ்கால்ப் பகுதியில் வைத்து ஒற்றி ஒற்றி எடுத்தால் சாறு நன்றாக கூந்தலின் வேர்க்கால்களில் படியும். பிறகு மறுநாள் காலை தலைக்கு குளித்துவிடுங்கள். தலையில் இருக்கும் பொடுகு, அரிப்பு போன்றவை விரைவில் குணமடையும்.
* வெள்ளை மிளகு பொடி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்துவர அரிப்பு குணமாகும். தலையில் அரிப்பு ஏற்பட்டால், சிறிது உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் தேய்த்து குளித்தால் அரிப்பு இல்லாமல் போகும்.
* ஒரு கப் வேப்பிலையை எடுத்து நன்றாக அலசிக்கொள்ளுங்கள், இதனுடன் 4 டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து இஞ்சி ஒரு துண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும், இதனை வடிகட்டி தலையில் நன்றாக மசாஜ் செய்யவும், சுமார் 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசினால் அரிப்பு தொல்லை நீங்கும்.