அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தாயும் அவரது மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 67 வயதான ஹேமலதா சச்சிதானந்தம் மற்றும் அவரது 34 வயது மகன் பிரமுத் ஆகியோரே காணாமற்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
கால்வாயொன்றில் காரொன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டு அதனுள்ளிருந்த தனிப்பட்ட உடைமைகளை கண்டுபிடித்தபோதிலும், காணாமல்போனதாக கூறப்படும் இருவரையும் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் கால்வாயில் இன்று இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவை காணாமல்போன தாய் மற்றும் மகனுடையதாக இருக்கும் என நம்பப்படுகிறபோதும் பொலிஸார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இலங்கை பின்னணிகொண்ட ஹேமலதா சச்சிதானந்தம் வானொலி அறிவிப்பாளராக தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் எனவும், மகன் பிரமுத் விசேட தேவையுடையவர் எனவும் மற்றவர்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள முடியாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.