மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர் இன்று (20) தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 13 மணி 10 நிமிட நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரியும் மதன் ராய். அவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய் (வயது-13).
குறித்த சிறுமி ஜியாராய் ஆட்டிசம் ஸ்பெக்டரம் பாதிப்பிற்குள்ளானவர்.மேலும் இச் சிறுமி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.
இவர் மும்பை கடற்படை பள்ளியில் படிக்கிறார். 2021 ஆம் ஆண்டு மும்பை கடலில் 36 கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்தார்.
இவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பாராட்டினார்.
இந்த நிலையில் இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை 29 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து இன்று (20) அதிகாலை 4.22 மணிக்கு மும்பையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி நீந்த ஆரம்பித்தார்
மதியம் 02.10 மணியளவில் இலங்கை- இந்திய சர்வதேச எல்லையை குறித்த சிறுமி வந்தடைந்தார். மாலை 5.32 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தார்.
குறித்த மாற்றுத்திறனாளி சிறுமி சுமார் 13 மணிநேரம் 10 நிமிடத்தில் கடந்துள்ளார். கடலில் நீந்தி வந்த சிறுமியை தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சிறுமியை வாழ்த்தினார்.
மேலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஜியாராய் ஒரு எடுத்துக்காட்டு. கடலில் உள்ள பல சவால்களை கடந்து சிறுமி சாதனை படைத்துள்ளதாக சைலேந்திர பாபு சிறுமியை பாராட்டினார்.
இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடல் பகுதியில் மெரைன் பொலிஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பலும் பாதுகாப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.