ஆசை வார்த்தை கூறி ஒரே நேரத்தில் 2 மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கோவை டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 40). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய இவர் ஒழுங்கீன நடவடிக்கையால் 2019-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து மணிமாறன் கோவை சரவணம்பட்டிக்கு வந்து இங்கு தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதி மாணவ- மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தினார். இவர் தங்கியிருந்த அறைக்கு அருகே 16 வயது சிறுமி ஒருவரின் வீடு உள்ளது. அந்த சிறுமி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
மணிமாறன் ஆசிரியராக பணியாற்றியவர் என்பதால் தங்கள் மகளுக்கு டியூசன் சொல்லித்தருமாறு மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டனர். அதன்படி பள்ளி முடிந்து வந்ததும் மாலை நேரத்தில் அந்த மாணவி, மணிமாறனின் அறைக்கு சென்று டியூசன் கற்று வந்தார்.
அப்போது அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி மணிமாறன் மயக்கினார். மணிமாறனின் வார்த்தைகளை நம்பி மாணவியும் தடம் மாறினார். உன்னை திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன், நாம் இங்கு இருந்தால் நம்மை பிரித்து விடுவார்கள், எனவே என்னுடன் நீ வந்து விடு, எங்காவது சென்று ஜாலியாக வாழலாம் என அழைத்தார்.
மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் மாணவியும் மணிமாறனின் பேச்சை கேட்டு கொஞ்சம் பணம், நகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மணிமாறனுடன் சென்றார். மாணவி மாயமானதால் அவரை பெற்றோர் தேடினர். அப்போது டியூசன் ஆசிரியர் மணிமாறனும் மாயமாகி இருந்தார். இதனால் அவர் தான் மாணவியை கடத்திச் சென்ற விவரம் அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் சரவணம்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், டியூசன் ஆசிரியரையும் தேடத் தொடங்கினார்கள்.
மாணவியை கடத்திச் சென்ற மணிமாறன் கொடைக்கானல், பொள்ளாச்சி என பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து ஜாலியாக இருந்தார். பின்னர் எங்காவது வாடகை வீடு பிடித்து தங்கலாம் என மாணவியிடம் தெரிவித்து அவரை மணிமாறன் குமரி மாவட்டத்துக்கு அழைத்து சென்றார்.
நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரத்துக்கு மாணவியுடன் மணிமாறன் சென்றார். அங்கு வாடகை வீடு தேடியபோது மாணவியும், தானும் புதுமணத்தம்பதி என அங்குள்ளவர்களிடம் தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய ஒருவர் மணிமாறனும், மாணவியும் தங்க வாடகை வீடு கொடுத்தார்.
அந்த வீட்டில் சிறிது காலம் மாணவியுடன் மணிமாறன் ஜாலியாக குடும்பம் நடத்தினார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளரின் மகளான கல்லூரி மாணவி, மணிமாறன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். பெற்றோர் தன்னிடம் அடிக்கடி ஏதாவது வேலை கொடுத்து தொல்லை கொடுப்பதாக மாணவி, மணிமாறனிடம் தெரிவித்தார். அதற்கு ஆறுதல் கூறத் தொடங்கிய மணிமாறன் கல்லூரி மாணவியிடமும் நெருங்கி பழக ஆரம்பித்தார். நாளடைவில் ஆசைவார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியையும் தனது வலையில் சிக்க வைத்தார்.
ஏற்கனவே ஒரு பெண் மணிமாறனுடன் இருப்பது தெரிந்து இருந்தும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கல்லூரி மாணவியும் மணிமாறனிடம் மயங்கினார். பள்ளி மாணவியை கடத்தியது போலவே கல்லூரி மாணவியிடமும் வீட்டில் இருந்து நகை, பணத்தை மணிமாறன் எடுத்து வரச் சொன்னார். பின்னர் நகை, பணத்துடன் 2 மாணவிகளையும் சுசீந்திரத்தில் இருந்து வெளியூருக்கு கடத்திச் சென்றார்.
கல்லூரி மாணவியை மணிமாறன் கடத்தியது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி மணிமாறன் மீது சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை போலீசாரும், குமரி மாவட்ட போலீசாரும் மணிமாறனையும், அவர் கடத்திச் சென்ற 2 மாணவிகளையும் தேடி வந்தனர். மணிமாறனின் புகைப்படத்தை நோட்டீசாக அச்சடித்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீசார் தேடினார்கள்.
பல மாதங்களுக்கு பின் மணிமாறன், 2 மாணவிகளுடன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தங்கியிருப்பதாக கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று மணிமாறனை கைது செய்தனர். அவருடன் இருந்த 2 மாணவிகளையும் மீட்டு கோவை அழைத்து வந்தனர்.
மணிமாறன் மீது ஆசை வார்த்தை கூறி கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணிமாறனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மாணவிகள் மீட்கப்பட்டது பற்றி அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவிகள் 2 பேரையும் மணிமாறன் சிறைவைத்து செக்ஸ் சித்ரவதை செய்துள்ளார். செல்போனில் ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து மாணவிகளிடம் அவர் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.