இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து மர்ம படகில் இலங்கையர்கள் 6 பேர் இந்திய எல்லையில் அரிச்சல்முனை அருகே 4வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டனர்.
கியூ பிரிவு பொலிஸாரின் தகவலையடுத்து இந்திய கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.
இலங்கை சிலாவத்துறை கொக்குப் பிடியான் மற்றும் மன்னாரில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை மற்றும் 4 மாத ஆண் குழந்தை உட்பட 6 பேர் பேசாலையிலிருந்து மர்மப் படகில் தலா பத்தாயிரம் கொடுத்து ராமேஸ்வரத்திற்கு வரும்வழியில் நள்ளிரவில் அவர்களை இந்தியகடற்பகுதியில் உள்ள ஆதாம்பாலம் மணல்திட்டு பகுதியில் 4 வது மணல் திட்டில் இறக்கிவிட்டு மர்ம படகு திரும்பி சென்றது.
தண்ணீர் உணவின்றி நடுக்கடலில் தவித்த அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு மண்டபத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். இலங்கையில் தற்போது மக்கள் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காரணம் வேலைவாய்ப்பு இல்லாமல் வருவாயின்றி தவித்துவரும் நிலையில் அரிசி , மா, கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடும் விலை உயர்வால் எந்த பொருளையும் வாங்க முடியாமல் தவிக்கும் நிலையில், எந்த வேலைவாய்ப்பும் இல்லாததால் வருவாய் இன்றி பசியிலும், பட்டினியிலும் மக்கள் முடங்கிக்கிடக்கின்றனர்.
இதனால் வாழ வழியின்றி குழந்தைகள் உயிரையாவது காப்பாற்றவேண்டும் என்ற நிலையில் அபயம் தேடி அகதிகளாக இங்கு வந்ததாக அவர்கள் கூறினர்.
இலங்கையிலிருந்து வந்த தியோரி கூறுகையில்:
நான் சிலாவத்துறை கொக்கு பிடியானில் வசித்து வருகிறேன். தற்போது இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. 1900 ரூபாய்க்கு விற்ற கேஸ் தற்போது 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்ற அரிசி தற்போது 230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் யாரும் வாழ முடியவில்லை. பிள்ளைகளை படிக்க வைப்பதில் இருந்து எல்லாவற்றுக்கும் கஷ்டமாக உள்ளது. எனக்கு கணவர் இல்லை.
ஆனால் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது அம்மா இங்குள்ள வேலூர் குடியாத்தம் முகாமில் உள்ளார். எனவே அவரிடம் வந்து சேர்ந்துவிட வேண்டும், பிள்ளைகளை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று புறப்பட்டு வந்தேன்.
எனது மச்சான் ஒருவர் மூலமாக படகு கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பேசாளையில் இருந்து புறப்பட்டோம். ஆனால் படகோட்டிகள் நள்ளிரவு 1:30 மணி அளவில் இந்தியாவிலும் இல்லாமல் இலங்கையிலும் இல்லாமல் நடுக்கடலில் ஒரு திட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டனர். இரவு 1.30 மணி முதல் காலை 9 மணி வரை தண்ணீர் உணவு இல்லாமல் தவித்தோம்.
அதன் பின்னர் இந்திய கடலோர காவல் படையினர் வந்து எங்களை மீட்டனர். எப்படியோ தப்பித்து வந்து விட்டோம் என்று கூறினார்.
இதுகுறித்து கஜேந்திரன் கூறுகையில்,
நான் எனது மனைவி 4 மாத குழந்தை உடன் வந்துள்ளேன். தலைமன்னாரில் பெயிண்டிங் மற்றும் தச்சு வேலை செய்கின்றேன். அங்கு பஞ்சத்தினால் தான் வந்தோம் அரிசியிலிருந்து மாவ முதல் எல்லா விலைவாசி உயர்ந்துள்ளது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
வேலை வாய்ப்பும் இல்லை. எப்படி வாழ முடியும். கஷ்டப்பட்டு படகு கட்டணமாக பத்தாயிரம் கொடுத்து இங்கு வந்தோம். விசாரணைக்குப்பின் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இலங்கையர்கள் ஆறுபேரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.