பெருந்தொற்றுப் பேரிடராக சுவிற்சர்லாந்து அரசால் நோக்கப்பட்டிருந்த மகுடநுண்ணிப் பெருந்தொற்று தற்போது சுவிஸ் அரசால் தொற்று நோயாக மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன் பொருளை சுக் மாநில அரச அதிபர் தெரிவித்த உவமையுடன் பார்த்தால், ஆம், மகுடநுண்ணி இன்னும் உலகில் முற்றும் முழுதாக ஒழியவில்லை, அப்படி ஒழியாதும் போகலாம், ஆனால் சுவிற்சர்லாந்து நலவாழ்வு நிறுவனங்களால், மருத்துவமனைகளால் இத்தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவம் அளிக்கமுடியும், தடுப்பூசி இடப்பட்ட பயன் இந்நோய்த்தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருக்கும்.
ஆகவே பேரிடர் பெருந்தொற்றிலிருந்து மகுடநுண்ணி (கோவிட்-19) தொற்றுநோயாக மட்டும் பார்க்கப்படும். முன்னர் சுவிற்சர்லாந்து அரசு அறிவத்ததுபோல் மீனத்திங்கள் நிறைவில் சுவிஸில் நிலவும் சூழலிற்கு ஏற்பா 01.04.22 முதல்மகுடநுண்ணிப் பெருந்தொற்றுச் சிறப்புச் தனிவகைச் சட்டத்தினை நீக்கிக்கொள்கின்றது.இதனை சுவிஸ் நடுவன் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி 01.04.22 முதல்பொதுப்போக்குவரத்துவாகனங்களிலும் ஏனைய நலவாழ்வு நிலையங்களிலும் இதுவரை இருந்து வந்த கட்டாயம் முகவுறை அணிந்திருக்க வேண்டும் எனும் விதி நீக்கப்படுகின்றது. அதுபோல் மகுடநுண்ணித் தொற்றுக்கு ஆளானவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம் எனும் விதியும் முற்றாக நீக்கப்படுகின்றது.
சுவிற்சர்லாந்து நடுவன் அரசு இப்படி அறிவித்திருந்தாலும் மாநிலங்கள் அங்கு நிலவும் சூழலிற்கு அமைவாக கட்டுப்பாடுகளை தொடரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் சூரிச், லுட்சேர்ன், பேர்ன் மற்றும் பாசல் மாநிலங்களில் நலவாழ்வு நிலையங்களில் (மருத்துவமனைகள், மூதாளர் இல்லங்களில்) தொடர்ந்தும் முகவுறை அணிந்திருக்க வேண்டும் எனும் விதி தொடரப்படுகின்றது.
மகுடநுண்ணி நோய்த்தொற்று இருப்பதாக எண்ணுவோர் தொடர்ந்தும் கட்டணமற்று நோய்ப்பரிசோதனை செய்துகொள்ளலாம், நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் எனும் முன் அறிகுறி உணர்வோர் தொடர்ந்தும் வீட்டில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எனவும் சுவிஸ் நடுவனரசின் நலவாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
மகுடநுண்ணி தற்போதயை நிலை
சுவிஸ் நலவாழ்வத்துறை அமைச்சின் தரவின்படி 31. 03. 2022 வியாழக்கிழமை 12 795 புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களின் விகிதம் பார்த்தால் இது 14 465 ஆக உள்ளது.
இதற்கு முந்தைய கிழமையுடன் இதனை ஒப்பிட்டால் – 38 விழுக்காடு ஆகும். தற்போது சுவிசில் 1786 ஆட்கள் மகுடநுண்ணித் தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றார்கள்.
132 ஆட்கள் ஈர்க்கவனிப்புபிரிவில் (தீவிரசிகிச்சை) சேர்க்கப்பட்டுள்ளார்கள் இது கடந்த கிழமையுடன் ஒப்பிட்டால் – 15 விழுக்காடு ஆகும். சுவிற்சர்லாந்து அரசு விடுத்திருக்கும் பொது அறிவிப்பில் சுவிசில் வாழும் பெரும்பாலான பொதுமக்கள் இருமுறை தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பயன், மக்கள் போதிய நோய் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளனர்.
கடந்த கிழமைகளில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர், தீவிரசிகிச்சை பெறுவோர் தொகை தொடந்து குறைந்து வருகின்றது இவை நல்ல அடையாளமாக நோக்கப்படுகின்றது.
திடீரென இத்தொகை கூடுவதற்கான வாய்ப்பு தற்போது காணப்படவில்லை. ஆகவே தான் இத்தளர்வுகளை சுவிஸ் அரசு அறிவிக்கக்கூடியதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பரிசோதனை – செயலி
சுவிஸ் பாடசாலைகளில் மற்றும் பொது நலவாழ்வு நிலையங்களில் கூட்டாக தொடர்ந்துமீளும் பொது மகுடநுண்ணித் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது, இதன் செலவினை சுவிற்சர்லாந்து நடுவனரசு ஏற்றிருந்தது.
01. 04. 22 முதல் இம்முறைமையினையும் சுவிஸ் அரசு நீக்கிக்கொள்கின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பெருந்தொற்றுக்காலத்தில் சுவிஸ் அரசால் மகுடநுண்ணித் தொற்றுத் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கவும், நோய்த்தொற்றுத் தடயம் அறியவும் பயன்பாட்டுச் செயலியை (ஆப்ஸ்) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் பயன்பாடு தற்போதைக்கு தேவையில்லை எனக் கருதுவதால் அதனை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் தளர்வு
சுவிற்சர்லாந்தின் நலவாழ்வு அமைச்சர் திரு. அலான் பெர்சே தளர்வுகள் தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்: «கடந்த இணர்டு ஆண்டுகள் நாம் இக்கட்டு இடர்பாட்டு நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளோம், தற்போது இத்தளர்வுகளை அறிவிக்கின்றோம் என்றார்.
மகுடநுண்ணியான (கோவிட்-19) பேரிடர் பெருந்தொற்று வெறும் தொற்றுநோயாக இன்று சுவிஸ் அரசால் பட்டியலிடப்பட்டாலும், எதிர்காலத்தில் இது பருவகால தொற்றுநோயாக வடிவம் மாற வாய்ப்பிருப்பதாகவும் சுவிஸ் நலவாழ்வுத்துறை அமைச்சரால் ஊகம் தெரிவிக்கப்பட்டது.
மகுடநுண்ணி சுவிசிலும் உலகிலும் எந்த வடிவம் மாறும், அதன் பேறுகள் எவையாக இருக்கும் என்பதை உலகம் பொறுத்திருந்தே காண முடியும் எனவும் திரு. பெர்சே தெரிவித்தார். திரிவடையும் மகுடநுண்ணி பருவகால நோயாக ஆண்டுகள் தோறும் வரும் வந்து செல்லும் தொற்றாக மாற வாய்ப்பு அதிகம் எனவும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
இளவேனிற்காலம்
2023 அடுத்த ஆண்டு 2023 இளவேனிற்காலம் வரை மகுடநுண்ணித் தொற்றின் போக்கினை நாம் உச்ச உன்னிப்புடன் கூர்ந்து நோக்க வேண்டும். இக்காலம் வரை மாற்றுநிலை கட்டமாகவே நோக்க வேண்டும்.
சூழலிற்கு ஏற்ப சுவிஸ் அரசு எதிர்வினை ஆற்ற வேண்டும். சுவிற்சர்லாந்து நடுவனரசு, மாநில அரசுகள் நோய்த்தொற்றுப் பரிசசோதனை செய்யவும், தடுப்பூசி இடவும், நோய்த் தொற்றுத் தடயம் அறியும் வழிகளை கண்டறியும் நுட்பம் ஆகிய வளங்களைத் தொர்ந்து பேணப்பட வேண்டும் எனும் சுவிஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுத்தடுப்பு பொறுப்பு
பெருந்தொற்றுக் காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு மாநில அரசிற்கு வழங்குவதாக 2013ல் மக்கள் வாக்களித்து உரிமை அளித்திருந்தனர். பெருந்தொற்றுக் காலத்தில் சிறப்பு தனிவகைச் சட்டம் இயற்றப்பட்டு நடுவனரசிற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
01.04.22 முதல் சிறப்புச்சட்டம் நீக்கப்பட்டதன் பயன் தொற்றுநோய்த தடுப்புப் பொறுப்பு மீண்டும் மாநில அரசுகளின் வகையில் வழங்கப்படுகின்றது. நோய்த்தொற்றினைக் கண்காணிக்கும் பொறுப்புக்களை மாநில நடுவனரசிற்கு பகிர்ந்தளிக்கும் மாதிரி வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது 22. 04. 2022 வரை ஆயப்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கும், சமூகப்பங்காளர்களுக்கும், பாராளுமன்றக் குழுக்களுக்கும் நடுவன் அரசால் அனுப்பி வைக்கப்படுகின்றது. இதன் பின்னர் அறுதி பணிப்பகிர்வு சுவிஸ் அரசால் வெளியிடப்படவுள்ளது.