பிரதமர் மகிந்த ராஜபக்ச தானாக பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கொண்டு வந்து அவரையும் அரசையும் வெளியேற்றுவோம். மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து அகற்றப்படுவார் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் பிரதமர் தீர்மானமிக்க அரசியல் முடிவொன்றை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலில் நிலையானது எதுவுமில்லை. ஒருவரிடமுள்ள அதிகாரங்களை காலத்துக்கு காலம் மாற்றும் பலம் மக்களிடமுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் தற்போதைய நிலைமையில் மக்களின் கோரிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒருவேளை, பிரதமர் தானாக பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கொண்டு வந்து அவரையும் அரசையும் வெளியேற்றுவோம். அந்த நிலைமைக்கு தள்ளாது, உரிய அரசியல் முடிவை பிரதமர் எடுப்பார். அதுவும் அடுத்த வாரத்திற்குள் இடம்பெறும் என்றே எதிர்ப்பார்க்கின்றோம்.
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எவ்வேளையிலும், அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்க முடியும்.
அதற்கான பெரும்பான்மை எங்களிடமுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் வைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியாது.
எனவே, பிரதமரை பதவி நீக்குவதற்கும் நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதால் அவர் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம். இல்லையேல், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோ ஹோம் கோட்டா எனப் போராடும் தரப்பினரிடம் அடுத்து நடக்க வேண்டியது என்ன என்று வினவினால், அதற்கு அவர்களிடம் எவ்வித பதிலும் இல்லை.
எனவே, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதே அரசியல் ரீதியாக சிந்திக்கும் எங்களுடைய நம்பிக்கையாகவுள்ளது.
நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் இணைந்து நெருக்கடிக்கு குறுகியகால தீர்வை வழங்கிவிட்டு, பின்னர் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள தேர்தலுக்குச் செல்லலாம்.
ஆனால், தற்போது தேர்தலுக்குச் செல்ல முடியாது என்பதால் நாடாளுமன்றத்திலேயே இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். இது நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.