விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம், டொலர் மற்றும் கே.பியிடம் இருந்து மீட்கப்பட்ட புலிகளின் கப்பல்களை உகண்டாவில் இருந்து மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வைத்தியரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் வடகிழக்கு இணைப்பு செயலாளருமான கோல்டன் பெர்ணான்டே தெரிவித்தார்.
மட்டக்களப்பு – செங்கலடியில் நேற்று இடம்பெற்ற “கோட்டா கோ ஹோம்” ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது இதை தெரிவித்தார்.
இன்று இந்த போராட்டத்துக்கு முக்கியமான காரணம் நமது நாட்டில் டொலர் இல்லாதது தான். யுத்தத்தின் பின்னர் ராஜபக்ஸவினர் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்த தங்கங்களை எடுத்து உகண்டாவிற்கு அனுப்பியுள்ளனர்.
இதனை இந்த மக்களிடம் கேட்டால் கூட கூறுவார்கள். அதேபோல விடுதலைப் புலிகளிடம் இருந்த கப்பல்கள் புலிகள் அமைப்பின் கே.பி என்பவரிடம் இருந்தது.
அந்த கப்பல்களை அவரிடமிருந்து மீட்டு அதனை ராஜபக்ஸவின் உறவினரது பெயரில் வேறு நாடுகளில் வைத்திருக்கின்றனர்.
அவ்வாறே வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அபிவிருத்தி திட்டத்துக்கு என 100 பில்லியன் டொலர் வந்தால், அதனை அந்த நாட்டிலே டீல் போட்டு அரைவாசியை அவர்கள் எடுத்துக் கொண்டு மிகுதியை மட்டும் தான் இங்கு கொண்டுவருவார்கள்.
இவற்றுக்கு எல்லாம் முக்கியமானவர் மகிந்த ராஜபக்ஸ உட்பட குடும்பமே. இவர்கள் கடும் கள்வர்கள். இவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு உகண்டாவில் உள்ள தங்கத்தை எல்லாம் திருப்பி எடுத்துவரவேண்டும் என்றார்.